

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியம், கவிதை, மாறுவேடப் போட்டிகளில் வென்ற சிறுவர்களின் வீடு தேடிச் சென்று ஏஎஸ்பிஹர்ஷ்சிங் பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம், பேரூராட்சி நிர்வாகம், ஆத்தூர் மக்கள் இயக்கம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியருக்கு வாட்ஸ்அப் மூலம் கரோனா விழிப்பணர்வு ஓவியம், கவிதை மற்றும் மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற 9 பேர், ஒவ்வொரு போட்டிக்கும் ஆறுதல் பரிசாக தலா 10 பேர் என மொத்தம் 39 பேர் தேர்வு செய்யப்பட்டனர். திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் அந்தசிறுவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பரிசுகளை வழங்கிபாராட்டினர். இதில் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.