

அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட தெக்கலூர் அருகே செங்காளிபாளையம் மூலக்காட்டு தோட்டத்து பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அவிநாசி மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் சர்வேஸ்வரன், காவலர்கள் திருவேங்கடம், விக்ரம் ஆகியோர் சாதாரண உடையில் நேற்று அங்கு சென்றுள்ளனர்.
அப்போது, மதுபாட்டில் வாங்க சென்ற காவலர் திருவேங்கடத்தை தகாத வார்த்தையில் பேசி, கொலைமிரட்டல் விடுத்து மது விற்றவர்கள் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு சென்ற பிற போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பிவிட, அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (53), அவரது மகன் சுதன் (20), திண்டுக்கல் விரக்கால் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முத்துசாமி (34), சட்டாம்பிள்ளை (32) ஆகிய4 பேரை பிடித்து, அவிநாசி சட்டம் - ஒழுங்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 66 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பிறகு 4 பேரும் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த காவலர் திருவேங்கடம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.