

அவசர காரணங்களுக்காக ஏற்காடு செல்பவர்கள் கட்டாயம் மாவட்ட ஆட்சியரிடம் இ- பாஸ் பெற வேண்டும் என சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் தற்போது அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் இன்று (7-ம் தேதி) முதல் வரும் 14-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் மளிகைக் கடைகள், காய்கறிகடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், பழம் உள்ளிட்டவை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது.மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் நடமாடும் காய்கறிகள் வாகனம் மூலம் வீடு களுக்கு சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதை 14-ம் தேதி வரை கண்காணிக்க வேண்டும்.
ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல அனுமதியில்லை. அவசர காரணங்களுக்காக ஏற்காடு செல்பவர்கள் கட்டாயம் மாவட்ட ஆட்சியரிடம் இ- பாஸ் பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், ஆட்சியர் கார் மேகம், எம்பி பார்த்திபன், கரோனா தடுப்பு பணி பொறுப்பு அலுவலர் முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) லதா, மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.