பனைத் தும்பு தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி : முன்மாதிரியாக திகழும் பட்டதாரி சகோதரர்கள்

தும்பு தயாரிக்கும் தொழிலாளர்கள். (வலது) காய வைக்கப்பட்டுள்ள பனைத் தும்புகள். ( உள்படம்) கரண்.
தும்பு தயாரிக்கும் தொழிலாளர்கள். (வலது) காய வைக்கப்பட்டுள்ள பனைத் தும்புகள். ( உள்படம்) கரண்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பனைத்தும்பு தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இளைஞர்களுக்கு முன்மாதிரியாக பட்டதாரி சகோதரர்கள் திகழ்கின்றனர்.

கடலாடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தில் தந்தை, 3 மகன்கள் சேர்ந்து பனைத்தும்பு (பல்மரா பைபர்) தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். வெளிநாடுகளில் ராணுவத் தளவாடங்களில் இந்த பனைத்தும்பு பிரஷ் ஆகப் பயன்படுத்தப்படுவ தாகக் கூறப்படுகிறது. ஐடிஐ படித்த மேலக்கிடாரத்தைச் சேர்ந்த லாடசாமி 20 ஆண்டுகளுக்கு முன்பு பனைமட்டையிலிருந்து தும்பு தயாரித்து, அதை தூத்துக்குடி, கேரளாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறார். தொடர்ந்து தனது பி.இ. படித்த மகன் கரண், பி.எஸ்சி. படித்த 2-வது மகன் கதிமுகன், டிப்ளமோ படித்த 3-வது மகன் வாசகன் ஆகியோரை இத்தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இங்கு 45 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதுகுறித்து கரண் கூறியதாவது:

பனைமரத்திலிருந்து மட்டை எடுத்து, அதை இயந்திரம் மூலம் தும்பாக தயாரிக்கிறோம். தும்பை அளவு வாரியாக பிரித்து காயவைத்து டன் கணக்கில் ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்புகிறோம். ஏற்றுமதியாளர் அந்த தும்பை பிராசஸ் செய்து, சாயம் ஏற்றி தேவையான நிறங்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக கனடா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு டன் தும்பு ரூ. 1 லட்சம் வரை விலைபோகும். தும்பு, கருப்பட்டி தயாரிப்பு தொழில்களுக்கு மானியத்துடன் வங்கிகள் கடன் வழங்கினால் பலர் இத்தொழிலில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in