

துவாக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த சிறுவன், சிறுமி உயிரி ழந்தனர். அவர்களது தாய், சகோதரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலை வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார்(45). அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். மேலும் 4 ஆம்புலன்ஸ்களை வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி சித்ராதேவி(40), மகன் விக்னேஸ்வரன்(14), மகள்கள் தனலட்சுமி(19), திவ்யா(17) ஆகியோர் நேற்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.
இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தி னர் அனைவரையும் மீட்டு, துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 4 பேரையும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன், திவ்யா ஆகியோர் இறந்தனர். சித்ராதேவி, தனலட்சுமி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதுகுறித்து துவாக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நந்தகுமார் தொடர்ந்து தன் குடும்பத்தினரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் சித்ராதேவி உட்பட 4 பேரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதையடுத்து தற்கொலைக்கு தூண் டியதாக நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.