மண் புழு உரக் கூடாரம் அமைக்க : விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை மானியம் :

மண் புழு உரக் கூடாரம் அமைக்க : விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை மானியம் :
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடையே ஊக்குவிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தின் கீழ் மண் புழு உரக் கூடாரம் அமைக்க 30 மீட்டர் நீளத்திலும், 8 மீட்டர் அகலத்திலும் இரண்டரை அடி ஆழம் அளவிலான கூடாரத்துக்கு ரூ.50,000 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க செயல் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்புழு உரக் கூடாரத்துக்கான இலக்கு எட்டப்பட்டுவிட்டது. இருப்பினும் தற்போது இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகள் மண் புழு உரக் கூடாரம் அமைக்க ஆர்வம் காட்டுவதால், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தில் மேலும் 100 மண் புழு உரக் கூடாரம் அமைக்க கூடுதல் இலக்கு பெறப்பட்டுள்ளது.

மண் புழு உரக் கூடாரம் அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம், அல்லது தோட்டக்கலைத் துறையின் உதகை உதவி இயக்குநர் அலுவலகத்தை 84896-04087 என்ற எண்ணிலும், குன்னூர் உதவி இயக்குநர் அலுவலகத்தை 63819-63018 என்ற எண்ணிலும், கோத்தகிரி உதவி இயக்குநர் அலுவலகத்தை 94864-12544 என்ற எண்ணிலும், கூடலூர் உதவி இயக்குநர் அலுவலகத்தை 89034-47744 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தங்கள் விண்ணப்பத்தை அளித்து, பெயரை முன்பதிவு செய்து பயனடையலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in