கடந்த 2 மாதங்களாக - ஊதியம் வழங்காததால் அரசு பள்ளி ஒப்பந்த தொழிற்கல்வி பயிற்றுநர்கள் 367 பேர் தவிப்பு :

கடந்த 2 மாதங்களாக -  ஊதியம் வழங்காததால் அரசு பள்ளி ஒப்பந்த தொழிற்கல்வி பயிற்றுநர்கள் 367 பேர் தவிப்பு :
Updated on
1 min read

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிற்கல்வி பயிற்றுநர்கள் 367 பேருக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காததால் சிரமப்படுகின்றனர்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2018-19-ம் ஆண்டு முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தொழிற்கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மொத்தம் 184 பள்ளிகளில் 367 பயிற்றுநர்கள் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக 367 பேரின் ஊதியத்தை கல்வித் துறை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் வருமானத்துக்கு வழியின்றி 367 பேரும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து ஒப்பந்த தொழிற்கல்வி பயிற்றுநர்கள் சிலர் கூறும்போது, எங்களை மாத ஊதியம் ரூ.20 ஆயிரத்துக்கு நியமித்தனர். ஓராண்டு மட்டுமே முறையாக ஊதியம் வழங்கினர். கடந்த ஆண்டு முதல் ரூ.10 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகின்றனர். தற்போது கரோனா ஊரடங்கு நேரத்தில் கடந்த 2 மாதங்களாக அந்த ரூ.10 ஆயிரத்தைக்கூட வழங்கவில்லை என்று கூறினர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னையில் உள்ள மாநில ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அலுவலகம் மூலம் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அந்நிறுவனம் பயிற்றுநர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. தற்போது இப்பயிற்றுநர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in