

சேலம் மாவட்டத்தில் குடிநீர் வசதி இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கடந்த மே 24-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மின்னஞ்சலில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் சேலத்தின் பெரும்பாலான பகுதியில் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காவிரி நீர், குடிநீர் விநியோகம் இல்லை. எனவே தாரமங்கலம் பகுதிக்குட்பட்ட தண்டு மாரியம்மன் கோயில், அம்மனி பழனியப்பா முதலி தெரு, காட்டு வேலாயுத முதலி தெரு ஆகியவற்றின் சந்திப்பில் 350 மீட்டர் நீளத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எங்களது பகுதிக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும், என அதில் கோரப்பட்டு இருந்தது.
இந்த மின்னஞ்சலை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனா பேரிடர் நேரத்தில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமைகளை மீறிய செயல். எனவே குடிநீர் வசதியின்றி சிரமப்படும் குடிமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும்.
குடிநீர் வசதியை செய்து கொடுக்காத அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் குடிநீர் வசதியில்லாத பகுதிகளுக்கு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் நிதியில் இருந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை 2 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.