தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் :
தூத்துக்குடி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனை கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண் கடன்கள் மற்றும் சுயஉதவிக் குழு கடன்களை 6 மாத காலம் வசூல் செய்வதற்கு தனியார் நிதி நிறுவனங்களுக்கு தடை விதித்து வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் பெ.சந்தனசேகர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜீவா, சக்தி பலவேசம், அர்ஜுன், கோகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல் முத்தையாபுரம், ஏரல், எட்டயபுரம், சூளவாய்க்கால், கோவில்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராஜா, ராஜாசிங், சூர்யா, சோலையப்பன், அஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.
