

ஒரத்தநாடு புதிய நீதிமன்றம் அருகே அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரிய மனு மீது நடவடிக்க எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த வீராச்சாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ஒரத்தநாடு தாலுகா ஆதி திராவிடர் முன்னேற்றச் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் நிதி திரட்டி, ஒரத்தநாடு புதிய நீதிமன்றம் அருகே அம்பேத்கர் வெண்கலச் சிலை நிறுவ அனுமதி கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை.
எனவே, நீதிமன்றம் அருகே அம்பேத்கர் வெண்கலச் சிலை அமைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை மனுவை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.