

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோதும், தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. இதற்காக, மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்க மையத்தில், காலை 10 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கினாலும், தினமும் காலை 6 மணி முதலே மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். அதன்படி, நேற்று 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து, மறுநாள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான டோக்கன் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு காலையும், 18- 44 வயதுடையோருக்கு மதியமும் என 100 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டன. அப்போது, வரிசைப்படி முறையாக டோக்கன் வழங்கவில்லை எனக் கூறி மாநகராட்சி பணியாளர்கள், காவல் துறையினருடன் டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும், தடுப்பூசி போட முடியாமல் தினமும் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதற்கிடையே, எந்த வயதினருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பது தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தகவல்களை, மையங்களில் உள்ள பணியாளர்கள் கூறுவதால் பொதுமக்கள் குழப்பமும், அதிருப்தியும் அடைகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: கரோனா தடுப்பூசி தொடர்பாக, தற்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பது குறைவாக இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்திடம் சரியான திட்டமிடல் இல்லாததால், ஊரடங்கு நேரத்தில் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
எனவே, தினமும் எந்தெந்த பகுதியில், எந்த வயதினருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிவித்தால், அதற்கேற்ப பொதுமக்கள் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். பலரும் தடுப்பூசிக்கான டோக்கன் பெறவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், அங்கு தொற்று பரவும் அச்சம் ஏற்படுகிறது. இதைக் கவனத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றனர்.