வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு கடன் உதவியுடன் தொழில் முனைவோர் திட்டம் :

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு    கடன் உதவியுடன் தொழில் முனைவோர் திட்டம்           :
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வங்கிக் கடனுதவியுடன் புதிய தொழில் முனைவோர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள உலகளாவிய ஊரடங்கால் தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு புலம் பெயர்ந்த தொழிலாளருக்கான தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தில் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்க அதிகபட்ச மானியமாக ரூ.50 லட்சம், 3 சதவீத வட்டி மானியத்துடன் திட்ட முதலீடு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது.

பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் தொழிற் கல்வி பயின்று இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 45 வயது வரையும், சிறப்பு பிரிவினருக்கு 21 முதல் 55 வயது வரையும் இருக்க வேண்டும்.

கடனுதவி பெறுபவர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தகுதியான ஆவணங்களோடு வெளிநாட்டில் பணி புரிந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in