

கரோனா தொற்று பரவல் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய நிலையிலும் குற்றாலம் வெறிச்சோடி கிடக்கிறது. குற்றாலம் அருவி மற்றும் ஊருக்குள் சுற்றித் திரியும் குரங்குகள் நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகள் அளிக்கும் உணவுப் பொருட்களையே உட்கொண்டு வாழ்கின்றன. இப்பகுதியில் உள்ள குரங்குகளிடம் தானாக இரை தேடும் வழக்கம் அரிதாகிவிட்டது.
ஊரடங்கு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாதால் விலங்குகள் ஆர்வலர்கள் குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் மற்றும் காவல்துறையினர் குற்றாலத்தில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு பழங்கள் உள்ளிட்டவற்றை உணவாக அளித்தனர். ஊரடங்கு முடியும் வரை குரங்குகளுக்கு காவல்துறையின் சார்பில் உணவு அளிக்கப்படும் என்று கூறிய எஸ்பி, பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள விலங்குகளுக்கு உணவு அளித்து உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.