

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறுதியாண்டு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்ட மேற்படிப்பு காலத்தை நீட்டிப்பு செய்யாமல் அனைத்து அரசுசாரா பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை முதுநிலை குடியிருப்பு மருத்துவர், அரசு உதவி மருத்துவராக கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் பணிக் காலத்தை முதுநிலை குடியிருப்பு பணிக்காலத்தில் சேர்க்க வேண்டும். அதற்கேற்ப ஊதியம் சலுகைகளை வழங்க வேண்டும்.
கரோனா கால பணியை 2 ஆண்டு கட்டாய சேவைக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும். கரோனா காலத்தில் பணிபுரியும் மருத்துவர்களின் சேவையை கருத்தில்கொண்டு 2 ஆண்டு கட்டாய சேவைக் காலத்தை ஓராண்டாக குறைக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நடத்தும் சூழல் ஏற்பட்டால் குறைந்தது 4 வாரங்களுக்கு முன்னதாக தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.