

மாதச் சம்பளம் பெறாத அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட 14 ஆயிரம் கோயில் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்றுஇந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறைநிர்வாகத்தின் கீழ் உள்ள 34 ஆயிரம்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ,10 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.12,959 கோயில்களில் ‘ஒரு காலபூஜைத் திட்டம்’ அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை. கரோனா தொற்று காரணமாக கோயில்களில் பக்தர்கள் வருகைஇல்லாததால் போதிய வருமானமின்றி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிறபணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
எனவே, கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு கோயில் ஊழியருக்கும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகைமளிகைப் பொருட்கள் வழங்கப்படும். அதேபோல், பணியாளர் அல்லாத கோயில் மூலம் உரிமம் பெற்றோருக்கும் இவை வழங்கப்படும்.
இதன் வாயிலாக மொத்தம் 14 ஆயிரம் கோயில் ஊழியர்கள் மற்றும் கோயில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள். இத்திட்டம் ஜூன் 3-ம் தேதி தொடங்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.