

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர
ணியை அடுத்த நாட்டாணிக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கோமதி. இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலை, புற்றுநோய் பாதித்து அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து, இவர்களது குழந்தைகளான சக்திவேல்(15), சங்கவி(12) இருவரும் தாத்தா சுப்பிரமணியன் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது, இவர்களது குடிசை வீடு சேதமடைந்தது. எனினும், அந்த வீட்டிலேயே சுப்பிரமணியன், பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பேராவூரணிக்கு நேற்று முன்தினம் ஆய்வுக்காக சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆதரவற்ற குழந்தைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த குழந்தைகளை சந்திக்க வேண்டுமென அமைச்சர் கூறியதும், பேராவூரணி மருத்துவமனைக்கு சுப்பிரமணியன் தனது பேரக்குழந்தைகளை அழைத்து வந்திருந்தார். அவர்களிடம் விவரங்களை கேட்டுவிட்டு, ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும், அவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கவும் உத்தரவிட்டார்.