

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள இலுப்பகோரை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்(60). இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மே 29-ம் தேதி இரவு இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியாமல் சொந்த ஊருக்கு உறவினர்கள் எடுத்து வந்து, மூச்சுத்திணறலால் இறந்ததாக கூறி, வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு செய்து, பின்னர் அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் வெளியானதும், வீரமாங்குடி சுகாதார ஆய்வாளர் நாடிமுத்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில், கரோனாவால் இறந்தவரின் சடலத்தை உரிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளுடன் அடக்கம் செய்யவில்லை எனக் கூறி, இறந்தவரின் சகோதரர் உதயசூரியகுமார், உறவினர்கள் கண்ணன், கலியமூர்த்தி ஆகிய மூவர் மீது புகார் அளித்தார். புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, தஞ்சாவூர் கீழவாசல் டவுன் கரம்பையைச் சேர்ந்த பிரகாஷ்(20) கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கூறி வீட்டில் இருந்துள்ளார். ஆனால், அவர் தெருக்களில் சுற்றி திரிந்ததாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித்குமார் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.