தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு - 75 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய அமைச்சர் :

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு -  75 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய அமைச்சர் :
Updated on
1 min read

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களையும் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருந்தாலும், ஒவ்வொரு நிலையத்திலும் தலா ஒரு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியாவது இருக்க வேண்டும் என ஆட்சியரிடம் தெரிவித்து இருக்கிறோம். தற்போது, 75 செறிவூட்டும் கருவிகள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்துவது குறித்து தற்போது கூடுதலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், போதிய அளவு தடுப்பூசி கேட்டு பெறப்படும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வராமல், அந்தந்த பகுதியிலேயே அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பணியிடத்தை நிரந்தரமாக நியமிக்க வேண்டும், தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் வசதி வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் எடுத்துச்சொல்லி, நிறைவேற்றித் தருவோம் என்றார்.

நிகழ்வின்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் ஆட்சியர் ம.கோவிந்தராவ், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in