வடிகால் வசதி செய்துதரக் கோரி - தூத்துக்குடி மாநகராட்சிக்கு தபால் அனுப்பும் போராட்டம் :
தூத்துக்குடியில் வடிகால் வசதி அமைத்து தரக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநகராட்சிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர், பால்பாண்டி நகர், செல்வநாயகபுரம், கோக்கூர், பாரதி நகர், புஷ்பா நகர், நிகிலேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதி, சாலை வசதி இல்லாததால் மழைக் காலங்களில் தெருக்களில் மழைநீர் குளம்போல தேங்குகிறது. இதனால் சாலைகள் சேதமடைந்துவிட்டன. முறையான வடிகால் வசதி செய்து, பக்கிள் ஓடையில் இணைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநகராட்சிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து தலைமை வகித்தார். நடிகர் பூ.ராமு முதல் தபால் அட்டையை எழுதி போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் 1,000 தபால் அட்டைகளை எழுதி மாநகராட்சிக்கு அனுப்பினர்.
