

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்வையாளர் தங்கும் மையத்தை சிலர் ஆக்கிரமித்து ஜெராக்ஸ் கடை நடத்தி வருவதால் சாலையோரங்களில் பெண்கள் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் நுரையீரல் பாதிப்புடன் 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இதையடுத்து நோயாளிகள், கர்ப்பிணிகளின் பெண் உறவினர்கள் தங்குவதற்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அருகே பார்வையாளர் தங்கும் மையம் உள்ளது. இந்நிலையில், அந்த கட்டிடத்தை சிலர் ஆக்கிரமித்து ஜெராக்ஸ் கடை வைத்துள்ளனர். மேலும், அந்த மையத்துக்குள் நோயாளிகளின் உறவினர்களை அனுமதிப்பதில்லை. இதனால் நோயாளிகளின் பெண் உறவினர்கள் சாலையோரத்தில் தங்கும் நிலை உள்ளது.
மேலும், அந்த ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. அப்பகுதியில் வேறு ஜெராக்ஸ் கடை இல்லாததால், வேறுவழியின்றி அந்த கடையில் நகல் எடுக்கின்றனர்.
தங்கும் மையத்தில் உள்ள ஜெராக்ஸ் கடையை அகற்றி பார்வையாளர்கள் தங்குவதற்கும், குறைந்த விலையில் ஜெராக்ஸ் எடுக்க மருத்துவமனை வளாகத்தில் வேறு இடத்தில் ஜெராக்ஸ் கடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.