

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 339 நடமாடும் வாகனங்கள் மூலம் இதுவரை 480 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. பாளையங்கோட்டை மண்டலத்தில் 122, மேலப்பாளையம் மண்டலத்தில் 120 , திருநெல்வேலி மண்டலத்தில் 57, தச்சநல்லூர் மண்டலத்தில் 40 என மொத்தம் 339 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை நடைபெறுகிறது.
இதுவரை 480 டன் அளவுக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் செல்ல முடியாத குறுகலான சந்துப் பகுதிகளுக்கு 2 சக்கர வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மூலம் நியமிக்கப் பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் நடமாடும் காய்கறி விற்பனை சேவை வாகனங்களை அவ்வப்போது கண்காணித்து வருவதுடன், வேளாண்மைத்துறை மற்றும் உழவர் உற்பத்திக்குழு மூலம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள் விற்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
தென்காசி
அவர் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வீட்டில் இருந்தே வாங்கி பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் இல்லம் நாடி வரும் இனிய காய்கறிகள் திட்டம் கடந்த 24-ம் தேதி அறிமுகப்படத்தப்பட்டது. இத்திட்டத்தின் கிழ் தோட்டக்கலைத் துறை, வேளாண்துறை, நகராட்சிகள், மகளிர் திட்டம் ஊரக வளர்ச்சித் துறை , பேரூராட்சிகள் சார்பில் 482 நான்குசக்கர வாகனங்கள் மற்றும் 121 இருசக்கர வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
அன்றாட தேவைக்கு பயன்படம் காய்கறிகளை ரூ.30, ரூ.60, ரூ.100 என 3 தொகுப்பாகவும், தேவைக்கு ஏற்ப சில்லறை விலையிலும்750 பேர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 6 நாட்களில் ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் ஆயிரம் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து வாகனங்களிலும் காய்கறிகள் விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. விற்பனை விலையை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.