

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன் கொடுத்து, அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை, தடுப்பூசிபோட 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பலர் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
டோக்கன் கிடைத்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டது. தடுப்பூசி இல்லாத நிலையில், டோக்கன் கிடைக்காதவர்களுக்கு நாளை (மே29)போடப்படும் என அங்கிருந்த போலீஸார் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தங்களுக்கும் இன்றே தடுப்பூசி போட வேண்டும் எனபோலீஸாருடன் பொது மக்கள்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அலைக்கழிப்பதாக புகார்
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக, மாநகராட்சி அலுவலகத்தில் தன்னார்வலர்கள் பலர் திரண்டனர். அப்போது தங்களுக்கு உரியபதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாகக் கூறி, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தன்னார்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநகராட்சி ஆணையரை சந்தித்து, கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபடும் தன்னார் வலர்களுக்கு, தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்து,கலைந்து சென்றனர்.