வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் 250 கூடுதல் படுக்கைகளுடன் - ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் சிகிச்சை : மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தகவல்

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த  மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன். அருகில், மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன். அருகில், மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட உள்ள 250 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தெரிவித்தார்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது ஐசியு மற்றும் ஆக்சிஜன் கொண்ட 675 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பலர் தவித்து வந்தனர். மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எண்ணிக்கை காலியாக உள்ளன.

இதற்கிடையில், கரோனா தொற்று எண்ணிக்கை எந்த நேரத்திலும் அதிகமாகும் என்பதால் அதற்கு ஏற்ப தற்காலிக கூடாரம் அமைத்து சிகிச்சை அளிக்கும் வசதிகளை ஏற்படுத்த உள்ளனர். இதற்காக, தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆம்பூர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சுமார் 1,000 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 2 தற்காலிக கூடாரங்கள், ஒரு தேர்வு கட்டுப்பாட்டு அறை வளாகம் என 3 இடங்களில் சுமார் 250 கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த உள்ளனர். இந்தப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரூ.9.75 லட்சம் மதிப்பில் 125 கிலோ எடையுள்ள துணிகளை துவைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட அறையையும் அவர் பார்வையிட்டார். அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வி உடனிருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கூறும்போது, ‘‘வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு தற்காலிக கூடாரத்தில் 145 படுக்கைகள், மற்றொரு கூடாரத்தில் 45 படுக்கைகள், கட்டிட அறை ஒன்றில் 60 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். படுக்கைகள் தயாராக உள்ள நிலையில் மின் வசதி அளிக்கும் பணி, நகரும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தும் பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

ஓரிரு நாளில் இந்தப் பணிகள் முடிவடையவுள்ளன. தமிழக அரசிடம் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 300-400 வரையிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். வரப்பெறும் இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படும்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பு வசதி உள்ளது. தற்போதைய நிலையில் இது போதுமானதாக உள்ளது’’ என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in