

தொற்று அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் அது ஆபத்தான கட்டம். அத்தகைய பாதிப்பு உள்ளவரை மூச்சுத்திணறல் ஏற்படும் முன்னதாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என கரோனா தொற்று தடுப்பு கண்காணிப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் அறிவுறுத்தினார்
கோவை மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள கரோனா தொற்று தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிகவரித் துறை முதன்மைச் செயலருமான எம்.ஏ.சித்திக், மாநகராட்சி பகுதிகளில் நேற்று ஆய்வுமேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம் சாலை மொத்த காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்த அவர், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு ஆக்ஸிஜன் அளவு, உடலின் வெப்பநிலை பரிசோதிக்க செல்லும் பணியாளர்கள், பரிசோதிப்பவரிடம் சரியாக பேசி, அவருக்கு பாதிப்புஉள்ளதா, அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து முழு விவரத்தை அறிய வேண்டும்.
ஒருவருக்கு அறிகுறி தென்படுகிறது என்றால் உரிய நேரத்தில் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்ய வைக்க வேண்டும்.
பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாலும், அவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். 4முதல் 5 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அது ஆபத்தான கட்டம். அத்தகைய பாதிப்பு இருப்பவருக்கு 6 அல்லது 7-வது நாளில் நிலைமை மோசமாகி விடும். மூச்சுத்திணறல் ஏற்படும்.
இந்த நிலை ஏற்படும் முன்னரே, தொடர் காய்ச்சல் உள்ளவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி அழைத்துச் சென்றால் ஆக்ஸிஜன் தேவை இல்லாமல் அவரை குணப்படுத்தி விட முடியும். அதேபோல வயதானவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு 92 சதவீதத்துக்கு கீழ் இருந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதை சுகாதார பணியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையர் ச.மதுராந்தகி, உதவி ஆணையர்கள் மகேஷ் கனகராஜ், சிவசுப்பிரமணியன், சுந்தர் ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.