எரிவாயு தகன மையத்தை இடமாற்றக் கோரி மறியல் :

எரிவாயு தகன மையத்தை இடமாற்றக் கோரி மறியல் :
Updated on
1 min read

பெரம்பலூர் நகரில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயு தகன மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூரில் ஆத்தூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மையம் உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக இங்கு நாளொன்றுக்கு சராசரியாக 10-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.

இந்நிலையில், சடலங்களை எரிக்கும்போது எரிவாயு புகை போக்கியிலிருந்து வெளியேறும் கரித்துகள்கள் அருகிலுள்ள வீடுகளில் தண்ணீர், உணவுப் பொருட்கள், பாத்திரங்களின் மீது விழுவதாகவும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் எரிவாயு மையத்தின் அருகிலுள்ள ஜமாலியா நகர் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எரிவாயு தகன மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி நேற்று காலை பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையர் குமரிமன்னன், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in