

லேசான அறிகுறியுடன் இருப்போரை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக கிராமப்புறங்களில் கரோனா கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்துவிடுதியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின்னர் அவர் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது உங்கள் ஊருக்கே வந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
லேசான அறிகுறியுடன் இருப்போரை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
இதேபோன்று, ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களையும் ஆய்வு செய்தார்.