

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தொற்று பாதிப்பின் சதவீதம் குறைவாக இருப்பவர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
வீட்டில் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு என்ன தேவை என்பது குறித்தும், தனிமையில் வீடுகளில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கி வருகின் றனர்.
மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் ஆலோசனையின்பேரில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 80 பேர் தன்னார்வலர்களாக, ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான பிரகதீஸ் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் ஜூனியர் ரெட் கிராஸ், சாரணர் இயக்கம், என்சிசி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ ஆசிரியர்கள் 80 பேர் தேர்வு செய்யப்பட்டு, தினமும் ஒரு வேளைக்கு 8 ஆசிரியர்கள் என காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகள், ஆலோ சனைகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்டவர் களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் தொடர்பாக மருத்துவர்களிடம் தெரிவிப்பது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர் என்றார்
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறும்போது, ‘‘அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.