வேலூரில் கரோனா தொற்று பாதிப்பால் - பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு நிவாரண உதவி :  நாராயணி பீடம் சார்பில் பிளஸ் 2 வரை இலவச கல்வி வழங்க ஏற்பாடு

வேலூரில் கரோனா தொற்று பாதிப்பால்  -  பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு நிவாரண உதவி  :   நாராயணி பீடம் சார்பில் பிளஸ் 2 வரை இலவச கல்வி வழங்க ஏற்பாடு
Updated on
1 min read

வேலூரில் கரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொரப்பாடி எழில் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ் (45). இவரது மனைவி பாமா (38). இவர்களுக்கு இமான் என்ற திபேஷ்ராஜ் (10), ஜோயல் என்ற பிரித்தீவ்ராஜ் (7) ஆகியோர் உள்ளனர். சிவராஜ், காட்பாடியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவராஜ், பாமா இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25-ம் தேதி சிவராஜூம், 26-ம் தேதி பாமாவும் உயிரிழந்தனர். இதனால், இவர்களது இரண்டு மகன்களும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களின் கல்வி உள்ளிட்டவற்றுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என குழந்தைகளின் உறவினர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை யின்பேரில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கீதாராணி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவ லர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். குழந்தைகள் இருவரையும் உறவினர்களே வளர்க்க விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும், கரோனா தொற்றால் டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்ததால் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்ற நிலையில் அதற்கான கருத்துருவை டாஸ்மாக் மேலாண் நிர்வாகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2 குழந் தைகளின் எதிர்காலத்துக்காக பல்வேறு அறக்கட்டளை, தனிநபர் கள் உதவ முன்வந்துள்ளனர். இதில், அம்பாலால் அறக்கட்டளை நிர்வாகி ஜவுரிலால் ஜெயின் இரண்டு குழந்தைகளின் பெயரில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உடனிருந்தார். அதேபோல், நாராயணி மெட்ரிக் பள்ளியில் இரண்டு குழந்தைகளும் பிளஸ் 2 வரை இலவச கல்வி வழங்க  நாராயணி பீடம் சக்தி அம்மா உறுதி அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in