

சேலத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தினசரி 900 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் வலியுறுத்தி வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை முதல் தவணை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த நேற்று காலை முதல் 300-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் குமாரசாமிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தனர்.
இரண்டாவது நாளாக நேற்றும் அங்கு தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகை வைத்திருந்ததால், ஏராளமான மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக தடுப்பூசி செலுத்த வந்த சிலர் கூறும்போது, “இரண்டாம் தவணை தடுப்பூசி கடந்த 10 நாட்களாக இல்லை என்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
கரோனா அதிகமாக பரவி வரும் நிலையில், உடனடியாக தடுப்பூசி கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி இதுபோல வந்து ஏமாற்றத்துடன் திரும்புவதோடு, இதற்காக வெளியில் வருவதால் தொற்று பரவல் அச்சமும் ஏற்படுகிறது” என்றனர்.