பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் - இதுவரை 1,400 கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை : திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் -  இதுவரை 1,400 கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை :  திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
Updated on
1 min read

திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் இதுவரை 1,400 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய் குமார் தெரிவித்தார்.

திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் கரோனா தொற்றாளர்களுக்கு பயன்படும் வகையில், ரூ.2.20 லட்சம் மதிப்பில் 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ராம்கோ சிமென்ட் நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் நேற்று வழங்கியது.

இந்நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவின் முதுநிலை துணைத் தலைவர் எஸ்.ராமராஜ், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய் குமாரிடம் அவற்றை வழங்கினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அஜய் குமார் கூறியது:

ராம்கோ சிமென்ட் நிறுவனம் வழங்கிய 5 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள், திருச்சி ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் வழங்க பெரிதும் உதவியாக இருக்கும். திருச்சி ரயில்வே கோட்டத்தில் நாள்தோறும் 20 முதல் 25 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதேவேளையில், அதே எண்ணிக்கையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.

திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் 200 படுக்கைகள் உள்ள நிலையில், கரோனா தொற்றாளர்கள் 60 பேர் சிகிச் சையில் உள்ளனர்.

இதுவரை 1,400 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் இதுவரை 500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியின்போது, பொன்மலை ரயில்வே மருத்துவமனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in