

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த வடுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன்(49). வாழை விவசாயி. தஞ்சாவூர் மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
இவர், தனது வாழைத்தோப்பில் உற்பத்தியான, 2.5 டன் அளவிலான 50 ஆயிரம் பூவம் வாழைப் பழங்களை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக தோட்டகலைத் துறை உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (பொறுப்பு) நமச்சிவாயம் ஆகியோரிடம் நேற்று ஒப்படைத்தார்.
இந்த வாழைப் பழங்களை உழவர் சந்தையில் உள்ள குளிர்பதனக் கிடங்கில் வைத்து, நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதியழகன் கூறியது: கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையாலும், ஊரடங்காலும் எங்கள் பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் வீணாகி வருகின்றன. எனவே, பழங்கள் வீணாவதை விட, யாருக்காவது பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, கரோனா தொற்றாளர்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளேன். கடந்த ஆண்டும் கரோனா தொற்றாளர்களுக்கு 1.8 டன் வாழைப் பழங்களை வழங்கினேன். கரோனா தொற்றாளர்களுக்காக வாழைப்பழங்களை இலவசமாக வழங்கியது எனக்கு மனநிறைவை அளித்துள்ளது என்றார்.