

முழு ஊரடங்கையொட்டி மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
கடலூர் நகராட்சியில் நகராட்சி பகுதிகளுக்கான நடமாடும் காய்கறி, பழக்கடைகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
அப்போது பேசிய அமைச்சர், “ கடலூர் மாவட்டம் முழுவதும், வேளாண் மற்றும் உழவர்நலத் துறை சார்பாக 60 நடமாடும் வாகனங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக 50 வாகனங்கள் ,30 தள்ளுவண்டிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித் துறை மூலம் 20 வாகனங்கள், 12 வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடலூர் நகராட்சி -16, சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பத்தில் தலா- 15, விருத்தாசலத்தில் 35 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பேரூராட்சித் துறை மூலம் 51 நடமாடும் வாகனங்கள், கூட்டுறவுத் துறை மூலம் 25 நடமாடும் வாகனங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 344 வாகனங்கள் மூலம் தினமும் காலை6 மணி முதல் மதியம் 12 மணிவரை காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்அருகில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும். கூடுதல்விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, நகராட்சி அலுவல கத்தில் பத்திரிகையாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடக்கி வைத்தார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 284 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் நகரில் மட்டும் 245 வாகனங்கள் மூலம் 122.5 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற் பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 18 வாகனங்களும், வேளாண் வணிகத் துறையின் மூலம் 13 வாகனங்களும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 183 வாகனங்களும், வேளாண்மைத் துறையின் மூலம்43 வாகனங்களும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 106 வாகனங்களும், கள்ளக்குறிச்சி நகராட்சியின் மூலம் 37 வாகனங்களும், பேரூராட்சித் துறையின் மூலம் 83 வாகனங்களும் என மொத்தம் 483 வாகனங்கள் மூலம் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
நுகர்வோர் மேலும் விவரங்களை அறிய மாவட்ட அளவில்வேளாண் இணை இயக்குநர்- 7010983876.துணை இயக்குநர்- 9443963234, தோட்டக்கலை துணை இயக்குநர் -9443546409, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)9443229175 என்ற எண்களிலும், வட்டார அளவில் சின்னசேலம்கலைசெல்வி-9486012682, சத்தியராஜ்-9524737498, கள்ளக்குறிச்சி சாமுவேல்-9443841066, வாமலை-9787237797, சங்கராபுரம் புஷ்பராணி -8248110335, முருகன்-9688940083.ரிஷிவந்தியம் கேவிந்தராஜ் -9940669943, சொர்னம்-8903555527, தியாகதுருகம்தங்கராஜ்-9600870410,-உமா - 8098327732, திருகோவிலூர் ராமர்-9750682505, கோபிநாத்- 8220700938, திருநாவலூர் சுப்ரமனியன்-9443044718,மஞ்சு-7601892822, உளுந்தூர்பேட்டை குமாரசாமி -9443826938, முருகன்-9787863135. வெள்ளிமலை சதிஷ்குமார் -9600757905 உள்ளிட்ட அலுவலர்களின் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். முழு ஊரடங்கைத் தாண்டி, அவ்வழியாக சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம், பயணம்மேற்கொண்டதற்கான விவரங்களை கேட்டறிந்தார். அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் வாகனங்களை அனுப்பி வைத்தார்.