

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன்- பாக்கியலட்சுமி தம்பதியரின் மகள் சாம்பவி(12). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். திருநீலகண்டன் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில், சாம்பவி சேமித்து வைத்திருந்த ரூ.8,300-ஐ முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ஆட்சியர் ம.கோவிந்தராசுவிடம் நேற்று முன்தினம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, நேற்று பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) அரவிந்தன், மாணவி சாம்பவியின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு புத்தகங்களை பரிசளித்து, பாராட்டினார். அப்போது வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சாம்பவியின் தாய் பாக்கியலட்சுமி, 2 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு நிவாரணமாக தமிழக அரசு வழங்கிய ரூ.1.50 லட்சத்தை பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.