தற்காலிகமாக தனியார் மருத்துவமனைகளின் - மருத்துவ சிகிச்சை நிர்வாகத்தை மாநில அரசு எடுக்க வலியுறுத்தல் :

தற்காலிகமாக தனியார் மருத்துவமனைகளின் -  மருத்துவ சிகிச்சை நிர்வாகத்தை மாநில அரசு எடுக்க வலியுறுத்தல்  :
Updated on
1 min read

தற்காலிகமாக தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ சிகிச்சை நிர்வாகத்தை மாநில அரசே மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்த பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் நேற்று அனுப்பிய கடிதத்தில், "திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றின் வேகத்துக்கேற்ப, அதனை எதிர்கொள்ள உரிய மருத்துவக் கட்டமைப்பு இல்லை. தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள், தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நெரிசலை தவிர்க்க, 60 வார்டுகளிலும் நோய் தொற்று பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சைக்கான மருந்துகள், மாத்திரைகள் வழங்குதல், தடுப்பூசி செலுத்துவதற்கான மருத்துவ சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும். இதன்மூலம் தான் நோய் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சிகிச்சை கட்டண விஷயத்தில், மாநில அரசின் எந்த வித ஆலோசனைகளையும் தனியார் மருத்துவமனைகள் கேட்பதாக தெரியவில்லை. மருத்துவக் காப்பீட்டுஅட்டைகளையும் மதிப்பதாக தெரியவில்லை. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். தற்காலிகமாக, தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ சிகிச்சை நிர்வாகத்தை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தேவைக்கு தக்கவாறு அதிகமாக திருப்பூர் மாவட்டத்துக்கு அனுப்ப வேண்டும். செவிலியர்களை அதிகரிக்க வேண்டிய அவசர நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக, தாய்-சேய் நலப் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆஷா பணியாளர்களை செவிலியர்களாக தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த வேண்டுகிறேன். இவர்கள், நோய் தொற்று தடுப்பு பணிகளிலும் கள அனுபவம் பெற்றவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in