மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு :
ஈரோடு அருகே மின்வேலியில் சிக்கிய யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. வனப்பகுதியையொட்டியுள்ள விளை நிலங்களில் யானை, காட்டுப்பன்றி போன்றவை நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல இடங்களில் தோட்ட உரிமையாளர்கள் மின்வேலி அமைத்துள்ளனர்.
இந்நிலையில், குண்டேரிப் பள்ளம் செல்லும் சாலையில் கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு ஒரு யானை நுழைய முயன்றது. அப்போது தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கிய யானை, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், இறந்த ஆண் யானைக்கு 35 வயது இருக்கும் என்றும், மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருந்ததே யானையின் இறப்பிற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் யானைகள் வருவதைத் தடுக்க வெட்டப்பட்ட அகழி சேதமடைந்து, மூடிவிட்டதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
