

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மே 14-ம் தேதிக்குப் பிறகு நேற்று வரை தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை வரை கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,467 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல, மாவட்டத்தில் மே 1-ம் தேதி முதல் நேற்று வரை 177 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சைக்கு சேர்கின்றனர். ஆனால், அங்கு ஆக்சிஜன் தேவைப்படும் கரோனா தொற்றாளர்களுக்கு முழு அளவில் ஆக்சிஜன் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும்போது, ‘‘மருத்துவமனையில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. ஆனால், 8 முதல் 10 ஆயிரம் லிட்டர் வரை மட்டுமே ஆக்சிஜனை நிரப்புகின்றனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு தொடர்ச்சியாக ஆக்சிஜனை வழங்க முடியவில்லை.
இதை சமாளிக்கும் நோக்கில் அடுத்தடுத்து வருவோருக்கு குறிப்பிட்ட நேரம் மட்டும் ஆக்சிஜன் வழங்குகின்றனர். இதனால்தான் கரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது திமுக அரசு, கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், உரிய தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் அளித்தால் மட்டுமே, அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளை அரசு செய்து தர முடியும். குறிப்பாக, ஆக்சிஜன் கொள்கலனை முழுமையாக நிரப்பி தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.