ஆசிரியர்களின் ஊதியம் குறைக்கப்படுமா? : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில்

ஆசிரியர்களின் ஊதியம் குறைக்கப்படுமா? :  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில்
Updated on
1 min read

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனை, சத்திரம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி ஆகியவற்றை பார்வையிட்ட பின்பு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை பள்ளிக்கல்வித் துறை ஆணையராக மாற்றியது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் வரப் பெற்ற கருத்துகளை முதல்வர் பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பார்.

கரோனா தொற்று குறைந்த பிறகே பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை வரை ஒரு மாத காலத்தில், கரோனா பரவலைத் தடுக்க முந்தைய காபந்து அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே வாரங்களில் கரோனா பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறது. நகர்ப்புறங்களில் நடத்தப்படுவதுபோல, கிராமப்புறப் பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

சத்திரம் பேருந்து நிலையத்தின் முதல் கட்ட விரிவாக்கப் பணிகள் ஜூன் இறுதியிலும், 2-ம் கட்ட பணிகள் 3 மாதங்களிலும் நிறைவடையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

பின்னர், ‘கடந்த ஓராண்டாக வேலையின்றி உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதுபோன்ற ஏதேனும் திட்டம் உள்ளதா?’ என்ற கேள்விக்கு, ‘‘இதுதொடர்பான கருத்துகளை நானும் சமூக வலைதளத்தில் பார்த்தேன். இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து, அவர் எப்படி ஆலோசனை கூறுகிறாரோ அதன்படி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, கரூர் எம்.பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in