

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முதல் நாளிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். பரிசோதனை செய்ய தவறும்பட்சத்தில் பொதுசுகாதார நோய் தடுப்பு சட்டத்தின்படி அம்மருத்துவமனையின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் சுய வைத்தியம் மேற்கொள்ளுதல் மற்றும் மருந்தகங்களில் இருந்து நேரடியாக மருந்துகள் பெற்று உட்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. தொற்று அறிகுறி தோன்றிய உடனேயே காலதாமதம் செய்யாது அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கோவிட் பரிசோதனை செய்வதோடு, முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் ஐவர்மெக்டின் போன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக்கூடாது. இந்த மருந்துகளை வழங்கும்போது மருந்து பெறுபவரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை கட்டாயம் தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். மேலும் மருந்துகள் ஆய்வாளருக்கும் தினமும் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருந்து கடையின்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் ஐவர்மெக்டின் போன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக்கூடாது.