

ஆலங்காயம் அருகே கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தக்கோட்டை ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார். இதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம் மற்றும் மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, ஜோலார் பேட்டை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட அத்தனாவூர் கிராமத்திலும் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மலை கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
நகர் புறங்களை தொடர்ந்து கிராமப்பகுதிகளிலும் கரோனா பரவல் அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு உள்ளிட்ட தொந்தரவு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் வீடு, வீடாக சென்று மலைகிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், சுகாதார மேற்பார்வையாளர் கனகராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி எம்எல்ஏ ஆய்வு
சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் வீடு, வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ‘Sp02’ அளவு சரியாக உள்ளதா? என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் நேற்று நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.