

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் நேற்று மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக 6.34 டன் திரவ ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில், கடந்த 12-ம் தேதி இரவு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதல் கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் திரவ ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மறுநாள் (மே 13) இரவு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆக்சிஜனை குளிர்விக்கும் கொள்கலன் பகுதியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஸ்டெர்லைட் மற்றும் இஸ்ரோ வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஆலையின் ஒவ்வொரு பகுதியாக இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. நேற்று அதிகாலை மீண்டும் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. நேற்று மாலை வரை 12 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதில், 6.34 டன் ஆக்சிஜன் நேற்று மாலையில் டேங்கர் லாரியில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லாரியை ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
“இதன் தொடர்ச்சியாக, அரசு வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு 6 டன்னும், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு 5 டன்னும் அடுத்தடுத்து திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படும்” என ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்தது.
ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி
வாயு நிலை ஆக்சிஜன்