

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில், 250 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வருகிறது. நேற்று முன் தினம் அதிகபட்சமாக 1568 பேருக்கு தொற்று உறுதியானது. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
ஈரோடு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அறிகுறிகள் இல்லாமலும், நுரையீரல் பாதிப்பு குறைவாகவும் இருக்கின்றனர். மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இல்லாதவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். தனிக்கழிப்பறை வசதியுடன் கூடிய அறை இருப்பின் இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இவர்களை சுகாதாரப்பணியாளர்கள் நாள்தோறும் சென்று கண்காணித்து வருகின்றனர்.
வாடகை வீடுகளில் வசிப்போர், தனி அறை மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாதவர்களைத் தங்க வைத்து சிகிச்சை அளிக்க பள்ளி, கல்லூரிகளில் படுக்கை வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பெருந்துறை மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலையில், இத்தகைய கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் நோயாளிகளுக்கு நல்ல பலனை அளித்து வருகிறது. அந்தியூர் ஐடியல் பள்ளி, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்த மையங்களில் உள்ள படுக்கைகளும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில், ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் கல்லூரியில் 250 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:
அறிகுறி இல்லாத கரோனா தொற்று கொண்டவர்களைத் தனிமைப்படுத்த கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு படுக்கைகள் நிரம்பிவிட்டதால், திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக் கப்பட்டு, 250 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 70 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.