ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் ஆய்வு : முதல்வரின் ஈரோடு வருகை ரத்து

ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் ஆய்வு  :  முதல்வரின் ஈரோடு வருகை ரத்து
Updated on
1 min read

பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வரும் தேசிய ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தேசிய ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. கரோனா சிகிச்சையில் உள்ளோருக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் பயன்பாட்டை நிறுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனம் தடையின்றி செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தேசிய ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்று (20-ம் தேதி) சேலம் மற்றும் கோவையில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிப்காட்டில் செயல்படும் தேசிய ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், முதல்வரின் சுற்றுப்பயணத்தில் இந்த வருகை இடம்பெறவில்லை. சேலத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி அப்பேரல் பார்க்கில் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான ஆலோசனையில் பங்கேற்கும் முதல்வர், அங்கிருந்து கோவை செல்கிறார். இதனால், முதல்வரின் ஈரோடு மாவட்ட பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in