

திருச்சி மாவட்ட ஆட்சியராக சு.சிவராசு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனோ பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 6 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் தெரிவித்து, தொற்று உறுதி செய்யப்படுபவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பிறருக்கு கரோனா பரவுவது தடுக்கப்படும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 19 சதவீதமாக உள்ளது. கடந்த 3 நாட்களாக இறப்பு விகிதமும் அதிகமாக பதிவாகியுள்ளது. எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் சதவீதத்தை 10 சதவீதமாக குறைப்பதும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதும், ஆக்சிஜன் வசதிகளை போதிய அளவில் ஏற்படுத்துவதுமே முக்கிய நோக்கம்.
திருச்சி மாவட்டத்துக்கு நாள்தோறும் 2,000 தடுப்பூசிகள் வரப் பெறுகின்றன. 18 வயதுக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால் கூடுதல் தடுப்பூசிகள் வரப் பெறும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.
படுக்கைகளை வைத்துக் கொண்டே இல்லை என்று கூறினாலோ, சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தாலோ, இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாலோ தொடர்புடைய தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.