

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினசரி 24,000 டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு, 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென எல்லா இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு சென்ற அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், நேற்று 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் கொண்டு செல்லும் கோபுரம் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இங்கு ஏற்கெனவே மின் உற்பத்தித் தேவை குறைவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.