

கிருஷ்ணகிரி நகராட்சியில் நாள்தோறும் 650 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. எனவே, மக்கும் குப்பை மக்காத குப்பையை பிரித்து வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 80-க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒரு நாளைக்கு 17 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப் படுகிறது. அதில் தினமும் 650 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள். குப்பையை தொட்டியில் போடாமல் தூய்மைப் பணியாளர்கள் வரும்போது அவர் களிடம் நேரடியாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் என்பதற்காக குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
ஆனால் பொதுமக்கள் சாலையோரங்க ளிலும், சாக்கடைக் கால்வாயிலும் பிளாஸ்டிக் கவரில் கட்டி கழிவுகளை வீசுகின்றனர். இதனால் நகரில் பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. மேலும் பிளாஸ்டிக் குப்பையை பிரித்து வழங்காததால், குப்பைக் கிடங்கில் இவற்றைப் பிரிக்க தூய்மைப் பணியாளர்கள் மிகவும்சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் தூய்மைப் பணியாளர் களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே பொதுமக்கள் அனை வரும் குப்பை கழிவுகளை சாலையோரம் மற்றும் சாக்கடைக்கால் வாயில் கொட்டக்கூடாது. மக்கும் சாதாரண குப்பையை தனியாக வும், மக்காத பிளாஸ்டிக் குப்பையை தனியாகவும் பிரித்து, தூய்மைப் பணியாளர்கள் வரும் போது அவர் களிடம் நேரடியாக வழங்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பைகளுடன் பொருட்களை வாங்கிச்செல் வதைக்கண்டால் பொதுமக்களுக்கும், கடைக் காரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.