வேலூர் தொரப்பாடியில் - எரிவாயு தகனமேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு :

வேலூர் தொரப்பாடி அவ்வை நகரில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையில் உடல்களை  எரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.
வேலூர் தொரப்பாடி அவ்வை நகரில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையில் உடல்களை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.
Updated on
1 min read

வேலூர் தொரப்பாடி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகனமேடை செயல்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. இதில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதேபோல், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தீவிர மூச்சுத் திணறல் காரணமாக வீடுகளில் இறப்பவர்கள், இயற்கை மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மட்டும் நாளொன்றுக்கு எல்லா சிகிச்சை வார்டுகளில் இருந்தும் சுமார் 20 பேர் வரை உயிரிழப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், வேலூர் மாநகரப் பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரை, அம்மணாங்குட்டையில் உள்ள எரிவாயு தகன மேடைகளில் தகனம் செய்யப்படுகின்றன.

சாதாரண நாட்களில் இந்த இரண்டு மயானங்களிலும் சராசரியாக தினசரி 3 உடல்கள் வரை தகனம் செய்யப் பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தினசரி10-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படுவதாக கூறப்படு கிறது. இதனால், இரண்டு தகன மேடைகளிலும் 24 மணி நேரமும் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதேநேரம், வேலூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொரப்பாடி அவ்வை நகரில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த எரிவாயு தகன மேடையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கான பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தகனமேடை பயன்பாட்டுக்கு வந்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும், மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் சுமார் 30-க்கும்மேற்பட்டோர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்களை எரிப்பதால் புகை மூட்டமும், துர்நாற்றமும் ஏற்படும் என்பதுடன் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சுத்திணற லால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்த அவர்கள் தொடர்ந்து போராடுவோம் எனக் கூறி கலைந்து சென்றனர். இதனால், எரிவாயு தகனமேடை செயல்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in