

டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோச னைக் கூட்டத்தில் பங்கேற்ற டெல்டா மாவட்ட விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்களில் கூறியிருப்பது:
அசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்கத் தலைவர் வா.வீரசேனன்: டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்வது மேட்டூர் அணை. கர்நாடக அரசின் தவறான நடவடிக்கையால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படுவதால், மூன்று போகம் நெல் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது ஒரு போக நெல் சாகுபடி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் பழனிசாமி, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வசதியை ஏற்படுத்தும் வகையில், மேட்டூரில் காவிரி உபரிநீர் இருப்பதாக தவறான அறிவிப்பை வெளியிட்டு, ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்ட மேட்டூர் அணையின் கீழ்க் கரையை உடைத்து, உபரிநீரை அந்த மாவட்டங்களுக்கு கொண்டு சென்றுள்ளார். இதனால், டெல்டா பாசன விவசாயத்துக்காக கல்லணைக்கு வரும் தண்ணீர் முற்றிலும் தடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சரபங்கா என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த மேட்டூர் உபரிநீர் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுதொடர்பான முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறாமலும், கீழ்ப் பாசன விவசாயிகளின் கருத் தறியாமலும் முன்னாள் முதல்வர் பழனிசாமியால் நிறைவேற்றப்பட்ட சரபங்கா உபரிநீர்த் திட்டத்தால் எதிர்காலத்தில் காவிரி டெல்டா அழிந்துவிடும். எனவே, சரபங்கா உபரிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரியில் மேட்டூர் அணை தொடங்கி கடைமடை வரை நிர்வாக அதிகாரம் முழுவதும் ஏற்கெனவே இருந்ததுபோல, கீழ்க் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும்.
கடலூர் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன்: ஆண்டு தோறும் பருவமழை குறிப்பிட்ட சில நாட்களில் கொட்டி தீர்த்துவிடுகிறது. இதற்காக காவிரி, கொள்ளிடத்தில் மேலணைக்கும், கீழணைக்கும் இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கதவணைகளைக் கட்டி மழை நீர், வெள்ளத்தை தடுத்து சேமிக்கலாம். எனவே, சரபங்கா உபரிநீர் திட்டத்தை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் தற்போதைய அரசு ஈடுபட வேண்டும்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ் சாவூர் மாவட்ட துணைத் தலை வர் வெ.ஜீவக்குமார்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கும் அதே காலத்தில், கால்வாய் பாசனத்துக்கும் முன்னாள் முதல்வர் தண்ணீரை திறந்துள்ளார்.
இதனால், தஞ்சாவூர் மாவட் டத்தில் செங்கிப்பட்டி பகுதிக்கு உரிய காலத்தில் தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே, கால்வாய் பாசனம் மூலம் நிறைவேற்றப்படும் உபரிநீர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.