சேலம் அரசு மருத்துவமனையில் - 1,081 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரி சித்த மருத்துவ கரோனா  சிகிச்சை மையத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் ஆட்சியர் ராமன், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன்.
சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரி சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் ஆட்சியர் ராமன், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன்.
Updated on
1 min read

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள 1,081 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். சேலம் ஆட்சியர் ராமன், எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் மருத்துவமனை டீன் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது, மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் ஆக்சிஜன் இருப்பு விவரம், சேமிப்புத்திறன், தேவை குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது, ஆம்புலன்ஸில் காத்திருந்த கரோனா நோயாளி களின் உறவினர்களிடம் குறை களை கேட்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள 1,081 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் மூன்று, நான்கு தினங்களில் இந்த வசதி ஏற்படுத்தி தரப்படும். இட நெருக்கடியை தவிர்க்க தடுப்பூசி மையம் மற்றும் சளி தடவல் பரிசோதனையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் மே 25-க்குள் நிறைவடையும்.

தமிழகத்துக்கு மொத்த ஆக்சிஜன் தேவை 470 டன். தற்போது 400 டன் ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. இதனால் மீதமுள்ள 70 டன் ஆக்சிஜனை வெளியில் இருந்து பெற்று தேவையைப் பூர்த்தி செய்து வருகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்ட பின்னர் அங்குஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சேலம் கோரிமேடு அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் சுப்பிரமணியன், “சித்த மருத்துவ சிகிச்சை பிரிவில் மேலும் கூடுதலாக 100 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in