

காவேரிப்பட்டணத்தில் வெங்கடசாமி - பழனியம்மாள் குடும்பத்தினர் சார்பில் கரோனா நிவாரணமாக மளிகை பொருட்களை எஸ்பி பண்டிகங்காதர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த வெங்கடசாமி, பழனியம்மாள் குடும்பத்தினர் சார்பில் வறுமையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 2000 குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான தலா ரூ.1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், 10 கிலோ அரிசி, உப்பு, நெய், உளுந்தம் பருப்பு, துவரம்பருப்பு, கோதுமை மாவு, வறுகடலை, ரவை தலா ஒரு கிலோ, சமையல் எண்ணெய் 1 லிட்டர், பெரிய வெங்காயம், உருளைகிழங்கு, சேமியா, புளி, 10 முகக்கவசங்கள், பால்கோவா உள்ளிட்டவை இருந்தன. சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இடத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு, வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கினர்.அதன்படி டோக்கன் வழங்கப்பட்டதில் 500 குடும்பங்களுக்கு, கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கே.எம்.சுப்ரமணி வரவேற்றார். கே.என்.கற்பூரசிவன், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.எம்.சுவாமிநாதன் தலைமை வகித்தார்.
இவ்விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் கலந்து கொண்டு, 500 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக மளிகை பொருட்களை வழங்கினார்.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது வாழ்தவாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கே.வி.எஸ்.சீனிவாசன், ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.