

திருநெல்வேலி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
இத்திட்டத்தில் மாவட்டத்தில் 3,88,331 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். ஒவ்வொரு ரேஷன்கடைக்கும் ஒரு நாளில் 200 பேருக்கு இத்தொகை வழங்கப்படும். பணகுடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, எம்.பி., சா.ஞானதிரவியம் ஆகியோர் இப்பணியைத் தொடங்கி வைத்தனர்.
நாங்குநேரியில் எம்எல்ஏ ரூபி மனோகரனும், பாளை யங்கோட்டையில் எம்எல்ஏ அப்துல்வகாபும், திருநெல்வேலியில் எம்எல்ஏ நயினார்நாகேந்திரனும் இப்பணியைத் தொடங்கிவைத்தனர்.
நாகர்கோவில்
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் காணொலி காட்சி மூலம், நிவாரணத் தொகை விநியோகத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் 567 மாவட்ட கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகள், 137 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 20 மகளிர் அமைப்புகள், 3 சுயஉதவிக்குழுக்கள், 47 இதர துறைகள் என மொத்தம் 776 நியாய விலைக்கடைகள் வாயிலாக சுமார்5,51,298 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை கரோனா நிவாரணத் தொகையாக ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.110 கோடியே 26 லட்சம் வழங்கப்பட உள்ளது. நிவாரணத் தொகையை பெற வரும்பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர் தொகுதிகளில் மீனவர் நலத்துறைமற்றும் கால்நடை பராமரிப்புத்துறைஅமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டார்.
கழுகுமலை வின்சென்ட் நகரைச்சேர்ந்த கந்தன் மனைவி குருவம்மாள்(65) தனது குடும்ப அட்டை செயல்பாட்டில் இல்லை என அதிகாரிகள் கூறுவதால், தனக்கு கரோனா நிவாரண நிதி கிடைக்க உதவ வேண்டும் என, கனிமொழி எம்.பி.யிடம் தெரிவித்தார். குருவம்மாளுக்கு கரோனா சிறப்பு நிதி அளிக்க அதிகாரிகளை எம்.பி. கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன்களப் பணியாளர்கள், கரோனா நோயாளிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் கூறும்போது, “காலை உணவு சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் கோயில் நிர்வாகம் சார்பில் 650 பேருக்கும், மதிய உணவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் சார்பில் ஆயிரம் பேருக்கும், இரவு உணவு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சார்பில் 300 பேருக்கும் வழங்கப்பட உள்ளது” என்றார்.